'தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள்' ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடி உத்தரவாதம்

தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள்' என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடி உத்தரவாதம் அளித்துள்ளார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
'தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள்' ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடி உத்தரவாதம்
Published on

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தலையீடு

அரசு அதிகாரிகளை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாக பார்க்க வேண்டும். அவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் அண்ணா. அதாவது அரசு பணிகளில் கட்சியினரின் தலையீடு இருக்க கூடாது என்பது தான் இதன் பொருளாகும். இதற்கு முற்றிலும் முரணான வகையில் தி.மு.க.வினரின் செயல்பாடுகள் இருக்கின்றன.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்று தமிழ் பழமொழிக்கு ஏற்ப ஒரே ஒரு உதாரணத்தை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சென்னையில் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியில் நன்கு பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள், சுகாதாரம், பொறியியல், வருவாய்த்துறை பணியாளர்களுடன் இணைந்து திறம்பட பணிபுரிந்து வருகின்றனர்.

களப்பணியாளர்களை....

இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், சென்னையை பொறுத்தவரையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. 17.5.2021 அன்று காலை ஒரு நாளைக்கு 7,564 என்று இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23.5.2021 அன்று காலை நிலவரப்படி 5,599 ஆக குறைந்து இருக்கிறது. இது மிகவும் ஆறுதலான செயல்.

இப்படிபட்ட சூழ்நிலையில், தி.மு.க.வினர் சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று தற்போது இருக்கும் களப்பணியாளர்களை நீக்கி விட்டு, அவர்கள் சொல்லும் நபர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று மிரட்டி இருப்பதாகவும், அதற்கு அதிகாரிகள் கட்சிகளின் பரிந்துரையின்பேரில் களப்பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படுவதில்லை என்று தெரிவித்ததாகவும், பயிற்சி பெற்று திறம்பட பணியாற்றி கொண்டிக்கும் தற்போதைய களப்பணியாளர்களை மாற்றி அமைத்தால், நோய் தடுப்பு பணியில் தொய்வு ஏற்படும் என்று எடுத்துக்கூறியுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

அவப்பெயர்

இதுபோன்ற முறையை அனைத்து இடங்களிலும் தி.மு.க.வினர் கடைப்பிடித்தால் கொரோனா நோய் தடுப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கொணடிருக்கும் முதல்-அமைச்சருக்கு அவப்பெயர் ஏற்படும் சூழ்நிலை உண்டாகும்.

எனவே கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொய்வின்றி தங்கு தடையின்றி நடக்க ஏதுவாக, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

இந்தநிலையில், தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி ஆணையர் மூலமாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை நீக்கிவிட்டு, புதிதாக வேறு நபர்களை பணியமர்த்த வேண்டுமென சென்னை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டுவதாக வந்த செய்தியை நான் கண்டித்ததோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் அறிக்கை வாயிலாக கேட்டிருந்தேன்.

இதனையறிந்த முதல்-அமைச்சர், தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் மூலமாக எனக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதற்காக, முதல்-அமைச்சருக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com