முதல்- அமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க ஆலோசனை கூட்டம்

முதல்- அமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க ஆலோசனை கூட்டம்
Published on

முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

காலை உணவு திட்டம்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து முதல் கட்டமாக செப்டம்பர் மாதம் 16-ந் தேதி சேலம் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் 54 தொடக்க பள்ளிகளிலும், 2-ம் கட்டமாக கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 24 மாநகராட்சி தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமையல் பணியாளர்கள்

2023-24-ம் ஆண்டு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழ்நாடு முழுவதும் ஊரக மற்றும் நகர்புறங்களில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து செயல்படுத்த ஏதுவாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி தேர்வு செய்யப்பட வேண்டிய பள்ளிகள், மாணவ, மாணவிகள் விவரம், சமையலறை கூடங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், புதிய சமையலறை கூடங்கள் கட்டுதல், சுய உதவிக்குழுவில் பணியாற்றும் அனுபவமிக்க சமையல் பணியாளர்கள் தேர்வு போன்றவை இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com