சென்னையில் 19,594 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்டப் பயிற்சி வகுப்பு - இன்று நடைபெற்றது

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் 17 இடங்களில் இன்று (28.03.2026) நடைபெற்றது.
சென்னையில் 19,594 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்டப் பயிற்சி வகுப்பு - இன்று நடைபெற்றது
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சென்னை மாவட்டத்தில் 978 இடங்களில் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 19,594 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரியவுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் 17 இடங்களில் இன்று (28.03.2026) நடைபெற்றது.

இவற்றில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், எழும்பூர் சட்டமன்றத் தொகுதி, ராயபுரம் மண்டலம், சூளை, ராட்லர் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினைப் பார்வையிட்டு, அங்கு தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி, அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்பினை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடேவும் (சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்), முனைவர் வீ.ப.ஜெயசீலனும் (இணை ஆணையாளர் (சுகாதாரம்)) பார்வையிட்டு அங்கு தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுகளின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com