மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் - மூத்த மாணவர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்

மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. மூத்த மாணவர்கள் அவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.
மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் - மூத்த மாணவர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்
Published on

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை சேர்ந்தவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று முதல் தொடங்கி இருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இதற்கான வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டு உள்ளன. கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் வகுப்பறைக்கு ஆர்வமுடன் வந்திருந்தனர்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமை தாங்கினார். இதில் சென்னை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் இ.தேரணிராஜன், துணை முதல்வர் டாக்டர் எம்.கவிதா, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எம்.பவானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 196 மாணவ-மாணவிகள் முதலாம் ஆண்டு வகுப்பில் நேற்று பங்கேற்றனர். முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளை, கல்லூரியின் மூத்த மாணவர்கள் இன்முகத்தோடு வரவேற்றதோடு, ரோஜாப்பூவையும் பரிசாக அளித்தனர். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் 6-வது மாடியில் உள்ள தேர்வு அறையில் நடந்த நிகழ்ச்சியில், மாணவ-மாணவிகளுக்கு மருத்துவப் படிப்புக்கான வெள்ளை கோட் ஆடை வழங்கப்பட்டது.

மேலும் படிப்பு தொடர்பான கையேடும் கொடுக்கப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகள் வெள்ளை கோட் ஆடை அணிந்தபடி, மருத்துவப் படிப்பு தொடர்பான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

இதேபோல், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவ-மாணவிகள் முதலாம் ஆண்டு வகுப்புக்கு வந்திருந்தனர். அவர்களை மூத்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர். சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கி இருக்கின்றன.

முதலாம் ஆண்டு வகுப்பு மாணவ-மாணவிகள் ஒரு வார காலத்துக்கு மருத்துவம் சார்ந்த அடிப்படை பாடங்கள் குறித்து பேராசிரியர்கள் எடுத்துரைக்க உள்ளனர். அதன் பின்னர், வழக்கமான பாடத்திட்டங்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com