மெரினா கடலில் சூறைக்காற்றில் படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் உயிரிழப்பு

சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர், காசிமேடு பகுதியை சேர்ந்த 2 பேருடன் மீன்பிடிக்க படகில் கடலுக்குள் சென்றார்.
மீனவர் உயிரிழப்பு
Published on

சென்னை,

சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த கோபிநாத் (வயது 46), மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. மீன்பிடி தடைகாலம் தற்போது அமலில் இருப்பதால், கோபிநாத் மீன்பிடிக்க செல்லாமல் தனது மனைவியுடன் காசிமேடு பகுதியில் உள்ள அவரது மாமியார் வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று அதிகாலையில் காசிமேடு பகுதியை சேர்ந்த 2 பேருடன் கோபிநாத் மீன்பிடிக்க படகில் கடலுக்குள் சென்றதாக தெரிகிறது. அப்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் இதமான வானிலையே காணப்பட்டது. கோபிநாத் மற்றும் அவருடன் படகில் கடலுக்கு சென்றவர்கள் மெரினா கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் சென்ற படகு காற்றின் வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கும் இங்குமாக ஆடியது.

இதில் கோபிநாத் உள்பட 3 பேரும் நிலைதடுமாறி கடலில் விழுந்தனர். கடலில் தத்தளித்த அவர்களில் 2 பேர் நீந்தி மீண்டும் படகில் ஏறினார்கள். ஆனால் கோபிநாத் படகுக்கு செல்ல முயன்றபோது, காற்று மற்றும் கடல் அலை வேகமாக இருந்ததால் நீந்த முடியாமல் கடலில் மூழ்கினார். படகில் ஏறிய மற்ற 2 பேரும், காற்றின் வேகம் குறைந்தவுடன் கோபிநாத்தை மீட்டு படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

மீனவர் உயிரிழப்பு:

கடலில் மூழ்கியதால் கோபிநாத் மயக்க நிலையிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் கோபிநாத்தை பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மெரினா போலீசார், கோபிநாத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். கடலில் மூழ்கி பலியான கணவர் கோபிநாத்தின் உடலை பார்த்து அவரது மனைவி ரேவதி கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க செய்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com