மீனவருக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் பொது இடத்தில் மது அருந்துவதை தட்டிக்கேட்ட மீனவர் ஒருவரை, மர்ம நபர்கள் 2 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவருக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள கீழவைப்பார் பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ஜாய்விக்டோரியன் (வயது 32), மீனவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் இரவு திரேஸ்புரம் குடியிருப்புப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் 2 பேர் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பொது இடத்தில் மது அருந்துவதை ஜாய்விக்டோரியன் கண்டித்ததுடன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு சத்தம் போட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் 2 பேர், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜாய்விக்டோரியனை சரமாரியாக வெட்டினர். இதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்தார். தாக்குதல் நடத்திய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

அக்கம் பக்கத்தினர் ஜாய்விக்டோரியனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஜாய்விக்டோரியன் அளித்த புகாரின் பேரில், வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடிய மர்ம நபர்கள் 2 பேரையும் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரேஸ்புரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com