கடலூரில் விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் மும்முரம்

இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
கடலூர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபா் படகுகளிலும், 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும் தினசரி ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள். பின்னர் அவற்றை கடலூர் துறைமுகத்தில் வைத்து விற்பனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ், கிழக்கு கடற்கரை வங்கக்கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கவும் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்படி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. அடுத்த மாதம்(ஜூன்) 14-ந்தேதி வரை விசைப்படகில் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடலூர் துறைமுகத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி தங்களது படகுகளை சீரமைக்கும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் வலையை சீரமைத்தல், படகு என்ஜின் பழுதை சரிசெய்தல், படகுகளுக்கு வர்ணம் பூசுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






