தமிழகத்தில் 10-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம்; அனைத்து மீனவர் கூட்டமைப்பு தீர்மானம்

கோரிக்கைகைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து மீனவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம்; அனைத்து மீனவர் கூட்டமைப்பு தீர்மானம்
Published on

ஆலோசனை கூட்டம்

தமிழக கடலோர அனைத்து மீனவர் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட அனைத்து விசைப படகு உரிமையாளர்கள் சங்க தலைவரும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சேசுராஜா தலைமை வகித்தார்.

ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகி போஸ் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில், ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநரிகள் தேவதாஸ், சகாயம், எமரிட், நாட்டுபடகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன், அனைத்து மீனவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மல்லிபட்டினம் தாஜுதீன், தூத்துக்குடி சேவியர்வாஸ், கன்னியாகுமரி செல்வம், சேதுபாவாசத்திரம் ராஜமாணிக்கம், சின்னமுட்டம் சில்வெஸ்டர், காரைக்கால் ஜெகதீசன், மண்டபம் அடைக்கலம், ஏர்வாடி செரிபு, ஜெகதாபட்டினம் கலைமணி உள்பட மாநிலம் முழுவதும் இருந்து மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய உரிமை

இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

தற்போது உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வால் மீனவர்கள் கடும் அவதி அடைந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறிய அளவில் வரிவிதித்து உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தப்படி பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும்.

இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து ஏற்பட்டு வரும் பொருள் இழப்பு, உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்து போன் படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மீனவர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவர உள்ள மீன்வள மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கிறோம்.

போராட்டம்

மேலும், மீனவர்களையும், மீன்களையும் பாதுகாக்கும் வகையில் சட்டம் நிறைவேற்ற வேண்டும், இந்த கோரிக்கைகள் தொடர்பாக தமிழக கடலோர அனைத்து மீனவர் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவது.

மேற்கண்ட மீனவர்நலன் சார்ந்த கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த மாதம் 10-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com