மீனவர்கள் 9-வது நாளாக ஆர்ப்பாட்டம்

கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி, 9-வது நாளாக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், உதவி கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மீனவர்கள் 9-வது நாளாக ஆர்ப்பாட்டம்
Published on

திசையன்விளை:

கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி, 9-வது நாளாக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், உதவி கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தொடர் போராட்டம்

உவரி அருகே கூடுதாழையில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மீனவர்கள் கடந்த 11-ந்தேதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மனித சங்கிலி, கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் என்று தினமும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மீனவர்கள், கடற்கரையில் உள்ள பந்தலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

9-வது நாளாக நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் போராட்ட குழு தலைவர் ரோபிங்சன் தலைமையில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

இந்த நிலையில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார், திசையன்விளை தாசில்தார் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் சாம்ராஜ் மற்றும் மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் நேற்று கூடுதாழையில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

பின்னர் அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கடலரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும், தற்காலிகமாக கடற்கரையில் மண்மூட்டைகளை அடுக்கி வைப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், இன்று (திங்கட்கிழமை) நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com