

ராமேசுவரம்,
இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிஜ்ஜோ என்பவர் உயிரிழந்தார். 4 மீனவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரும் வரையில் மீனவர் உடலை வாங்க மாட்டோம் என மீன அமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர்.
மீனவர்கள் தரப்பில் ராமேசுவரத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய எல்லையில் மீன்பிடித்த மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. போராட்ட களத்தில் உள்ள மீனவர் பேசுகையில், மத்தியில் இந்திரா காந்தி ஆட்சி நடைபெற்ற போது மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு ராமேசுவரம் கொண்டுவரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோன்ற நடவடிக்கையை இப்போது மோடி அரசு எடுக்கவேண்டும் என போராட்டம் நடத்துபவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படைக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மீனவர்கள், வாடிவாசலை திறக்க போராடிய மாணவர்கள், நெடுவாசலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக போராடி வரும் மாணவர்கள் எங்களை காப்பாற்றவும் போராட வரவேண்டும். நாங்கள் இலங்கையுடன் போராட்டத்திற்கு செல்லவில்லை. அங்கு கொள்ளையடிக்க செல்லவில்லை. எங்களுடைய வாழ்வாதாரத்திற்காக கடலில் மீன் பிடிக்க செல்கிறோம். அங்கு செல்லும் எங்களுடைய பிள்ளைகளை சடலமாகதான் பார்க்கிறோம், எங்களுக்கு நியாயம் கோர யாரும் கிடையாது. எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும், மாபெரும் போராட்டமாகும் என போராட்டக்கத்தில் உள்ள பெண்கள் கூறிஉள்ளனர்.