15-ந்தேதி தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்.. தமிழகத்தில் எங்கெல்லாம் தடை..?

மீன் சந்தைகளில் விற்பனை வரலாறு காணாத உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
15-ந்தேதி தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்.. தமிழகத்தில் எங்கெல்லாம் தடை..?
Published on

சென்னை,

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், கடல் வளத்தைப் பாதுகாக்கவும் மீன் உற்பத்தியைப் பெருக்கவும் ஆண்டு தோறும் மீன்பிடி தடைக்காலம் 61 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலம் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலத்தில் விசைப்படகுகளின் எந்திர இரைச்சல் மற்றும் ராட்சத வலைகளால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவே ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை கடலுக்கு 'ஓய்வு' அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் சிறிய மீன் குஞ்சுகள் அழிவதைத் தடுத்து, வருங்காலங்களில் மீன் வளம் பெருக வழிவகை செய்யப்படுகிறது. தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் இந்த மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ந்தேதி புதன்கிழமை முதல் தொடங்குகிறது. இந்த தடை அமலுக்கு வரும்போது மீனவர்கள் கடலில் இருக்கக்கூடாது என்பது விதிமுறை ஆகும்.

எனவே, ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ள விசைப்படகுகள் அனைத்தும் ஏப்ரல் 14-ந்தேதி நள்ளிரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதனால் குறுகிய தூர மீன்பிடிப்புக்காக விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் செல்வது இன்றே கடைசி நாளாக இருக்கும்.

இந்த மீன் தடையின் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆழ்கடல் மீன்வரத்து இருக்காது என்பதால், தடைக்காலத்திற்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஏப்ரல் 12) மீன் சந்தைகளில் விற்பனை வரலாறு காணாத உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று சென்னை காசிமேடு, வானகரம், சிந்தாதிரிப் பேட்டை போன்ற மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனிடையே மீனவர்களுக்கு தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.8 ஆயிரம், தேர்தல் காலம் என்பதால் தமிழக அரசு கடந்த மாதமே அவர்களது வங்கி கணக்கில் செலுத்திவிட்டது.

எங்கெல்லாம் தடை

தமிழகத்தின் வடக்கே திருவள்ளூர் முதல் தெற்கே கன்னியாகுமரி (கிழக்கு கடற்கரை பகுதி) வரையிலான சுமார் 1,076 கி.மீ. நீளமுள்ள கடலோரப் பகுதிகளில் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி (கிழக்கு கடற்கரை பகுதிகள்) ஆகிய பகுதிகள் முழுவதும் ஆழ்கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும் நமது அண்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே காலத்தில் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com