மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு முடிவு: மீன்பிடிக்க செல்ல விசைப்படகு மீனவர்கள் ஆயத்தம்


நாளை நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை

கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த காலமாக மீன்வளத் துறை ஆய்வு செய்து கண்டறிந்து அறிவித்துள்ளது. எனவே, இந்த காலக்கட்டத்தில், மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால், அதற்கு இடையூறு ஏற்படாத வகையில், கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகளுக்கு தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியான வங்கக்கடலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14-ந் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவது இல்லை. ஆரம்பத்தில் 45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த சில ஆண்டுகளாக 61 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி கிராமம் வரை 1,076 மைல் தொலைவுள்ள கிழக்கு கடலோர பகுதியில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 12 மாவட்டங்களில் 6,700 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையில் ஓய்வெடுத்து வந்தன.

அதே நேரத்தில், கரையில் இருந்து 3 மைல் தொலைவுக்கு பைபர் படகுகள், கட்டுமரங்களில் சென்று மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறிய படகுகளில் குறைவான தூரத்தில் சென்று மீன்பிடித்தபோது, சிறிய அளவிலான மீன்களே கிடைத்தன. அதனால், பெரிய சைஸ் மீன் பிரியர்களின் தேவைகளுக்கு மேற்கு கடல் பகுதியான அரபிக்கடலில் பிடிக்கப்படும் மீன்கள் ஐஸ் கட்டி துண்டுகளால் பதப்படுத்தி கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதனால், மீன்களின் விலையும் அதிகரித்தது.

மீன்பிடி தடைக்காலமான இந்த 61 நாட்களும் விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் உள்ள பழுதுகளை சரிசெய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், விசைப்படகு மீனவர்கள் மீண்டும் தொழிலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

பொதுவாக, கடலில் குறைந்த தூரத்திற்கு கட்டுமரம், பைபர் படகுகளில் சென்று மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், குடிக்க தண்ணீர் மட்டுமே கூடுதலாக எடுத்துச் செல்வார்கள். ஆனால், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது, ஒரு வாரத்திற்கு தேவையான அனைத்தையும் விசைப்படகுகளில் மீனவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

அந்த வகையில், மீண்டும் மீன்பிடிக்க செல்ல இன்னும் ஒருநாள் மட்டுமே இருப்பதால், விசைப்படகுகளில் மீன்களை பதப்படுத்தி வைக்கும் கீழ் அறைகளில் ஐஸ் கட்டிகளை நிரப்பி வைப்பது, தேவையான அளவு குடிநீர் கேன்களை வாங்குவது, படகுகளிலேயே உணவு சமைக்க தேவையான பொருட்களை எடுத்துச்செல்வது போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்படுகிறது.

நாளை நள்ளிரவு முதல் விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் 3 நாட்கள் முதல் 7 நாட்களுக்குப் பிறகு கரை திரும்புவார்கள் என்பதால், அதன் பிறகே பெரிய சைஸ் மீன்களின் விலை குறையத் தொடங்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story