

தூத்துக்குடி,
மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி தமிழகத்தின் கிழக்கு கடற் கரை பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் மீன்பிடித் தடைக்கா லம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், வேம்பார், தருவைகுளம் போன்ற இடங்களில் உள்ள 545-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த மீன்பிடி தடைக்காலத்தில் தூத்துக்குடி கடல் பகுதியில் கேரளம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க மீன்வளத்துறையினர், மீனவர்கள், போலீசார், கடலோர காவல்படையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கூட்டு ரோந்து மேற்கொள்ளப்பட்டது.
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை மராமத்து செய்தல், வலைகளை சரி செய்தல், புதிய வலைகளை பின்னுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
தடைக்காலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைவதால் தூத்துக்குடியில் இருந்து 250-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும், தருவைகுளம், வேம்பார் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்களும் 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
நேற்று முதல் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் பழுதுகளை நீக்கி புதுப்பித்து தயார்நிலையில் வைத்து உள்ள தங்களது விசைப்படகுகளில் டீசல் நிரப்புதல், சீரமைக்கப்பட்ட வலைகளை ஏற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலையில் என்ஜின் சீராக இயங்குகிறதா? என்று மீனவர்கள் விசைப்படகுகளை கடலுக்குள் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தினர். தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்வதால் மீன்கள் அதிகளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் உள்ளனர்.