

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இதற்காக அவர் கடந்த 7 ஆண்டுகளாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே செல்வதும், பின்னர் குடும்பத்தினர் அவரைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியேறிய அந்த இளம்பெண், தக்கலை அருகே உள்ள கீழ்கல்குறிச்சி பகுதிக்குச் சென்றுள்ளார். அன்று இரவு, அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் நாலாபுறமும் தேடி வந்தனர். அப்போது கீழ்கல்குறிச்சி பகுதியில் மிகுந்த சோர்வடைந்த நிலையில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை குடும்பத்தினர் மீட்டு விசாரித்தபோது, அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
இதுகுறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. கீழ்கல்குறிச்சி பகுதியில் தனியாக நின்றிருந்த அந்த இளம்பெண்ணிடம், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிபின் (வயது 32) என்பவர் நைசாகப் பேச்சுக் கொடுத்துள்ளார்.
அன்று சிபின் வீட்டில் யாரும் இல்லாததை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், அந்த இளம்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனது நண்பர்களான, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சிஜோ, ராபின் மற்றும் கிங்ஸ்லி ஆகிய 4 பேருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளார். தொடர்ந்து 5 பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, மறுநாள் காலையில் அவரை அப்பகுதியில் விட்டுச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக சிபின், மணிகண்டன், சிஜோ, ராபின் மற்றும் கிங்ஸ்லி ஆகிய 5 பேர் மீதும் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். போலீஸ் விசாரணையை அறிந்து தலைமறைவாக இருந்த 5 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடூரச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.