திருச்சி அருகே ஆம்னி வேன் மரத்தில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்சி அருகே ஆம்னி வேன் மரத்தில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
ஆம்னி வேன்
Published on: 

திருச்சி,

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி வேன் மரத்தில் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் ராயந்தூரைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் இவர், தனது நண்பர்கள் 7 பேருடன் தனக்கு சொந்தமான ஆம்னி வேனில் நாமக்கலில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்றுள்ளார். விழா முடிந்து இன்று பிற்பகல் 4 மணியளவில் துறையூர் வழியாக அவர்கள் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

5 பேர் பலி

அப்போது, திருச்சி ஜம்புநாதபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது, இடதுபுறமாக சென்ற வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறமாக பாய்ந்து, சாலையோரமிருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணை

இதுகுறித்து ஜம்புநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சுயநினைவு திரும்பிய பிறகே, விபத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

X