

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை, நீர்வரத்து சற்று குறைந்ததை அடுத்து பகுதி வாரியாக தளர்த்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கோதையாற்றில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்ததை அடுத்து, திற்பரப்பு அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அங்கு குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முதலில் முழுமையாக தடை விதித்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் வேகம் சற்று குறைந்துள்ளதால், அருவிக்கு வரும் நீர்வரத்தும் ஓரளவுக்கு சீராகியுள்ளது. இதன் காரணமாக, தடையை முழுமையாக நீக்காமல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அருவியின் ஒரு பகுதியில் உள்ள பாதுகாப்பான 2 இடங்களில் மட்டும் பயணிகள் குளிப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இருப்பினும், நீர்நிலைகளின் நிலவரத்தை பொதுப்பணித்துறை மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மழையின் நிலவரத்தைப் பொறுத்து கட்டுப்பாடுகளில் கூடுதல் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தூர் தொட்டிப்பாலம் மற்றும் திற்பரப்பு பகுதிகளுக்கு வரவிருக்கும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் நிர்வாகத்தின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.