

சென்னை,
வங்கக் கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல், இன்று (புதன்கிழமை) ஆந்திர மாநில கடலோரப் பகுதியில் கரையை கடந்து வரும் நிலையில், சென்னையில் இருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜ முந்திரி இடையே இயக்கப்படும் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து செல்லும் 6 விமானங்களும், வருகை தரும் 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களது விமானப் பயண விவரங்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் உறுதிப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
நேற்று 4 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு விசாகப்பட்டினம் புறப்பட்டு செல்ல வேண்டிய இண்டிகோ விமானமும், இரவு 7.05 மணிக்கு விஜயவாடா புறப்பட்டு செல்ல வேண்டிய இண்டிகோ விமானமும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல், விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு சென்னை வந்தடைய வேண்டிய இண்டிகோ விமானமும், விஜய வாடாவில் இருந்து இரவு 10.05 மணிக்கு சென்னை வந்தடைய வேண்டிய இண்டிகோ விமானமும் ரத்து செய்யப்பட்டன.