ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; தண்டோரா மூலமாக அறிவிப்பு

Flood alert for Cauvery coastal people in Erode district; Notification by Tandora
Published on

ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தண்டோரா மூலமாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள கபினி, கே.எஸ்.ஆர். உள்ளிட்ட அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 119.29 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 18 ஆயிரத்து 671 கனஅடி தண்ணீர் வந்தது.இந்தநிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் காவிரி ஆற்றங்கரை ஓரமாக உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்ல மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தி உள்ளார்.

தண்டோரா

ஈரோடு மாவட்ட காவிரிக்கரையோர பகுதியான சின்னப்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, ஊராட்சிக்கோட்டை, குருப்பநாயக்கன்பாளையம், பவானி, சூரியம்பாளையம், பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், ஊஞ்சலூர், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வருவாய்துறையினர் அறிவுறுத்தினார்கள். இந்த பகுதிகளில் தண்டோரா மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எச்சரிக்கை அறிவிப்பு

மேலும், காவிரி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக திறந்துவிடப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் காவிரிக்கரைக்கு செல்லவும், அங்கு நின்று செல்பி எடுத்து கொள்ளவும் வேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். மேலும் அந்த பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் யாரும் காவிரிக்கு செல்லாதவாறு தடுப்பு அமைத்து, எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைத்துள்ளார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com