வெள்ள நிவாரணம்: கன்னியாகுமரியில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை வழங்கப்படும் - மாவட்ட கலெக்டர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
வெள்ள நிவாரணம்: கன்னியாகுமரியில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை வழங்கப்படும் - மாவட்ட கலெக்டர்
Published on

கன்னியாகுமரி, 

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வெள்ள சேதங்கள் கணக்கெடுப்பு பணிகள் முடிவுற்று நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டது.

இதில் வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்னும் பலர் இந்த நிவாரணத்தொகையை வாங்கவில்லை. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை வெள்ள நிவாரண நிதி ரூ.1000 வாங்காத அல்லது விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை கடந்த 29.12.2023 அன்று முதல் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுநாள் வரை நிவாரணத்தொகை வாங்காத விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை வழங்கப்படும். எனவே விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாய விலைக் கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் " என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com