

ஆத்தூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆணைவாரி அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் 2-வது நாளாக இன்றும் தடை விதித்துள்ளனர்.
ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட முட்டல் கிராமத்தில் ஆணைவாரி அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அருவியில் சீரான நீர்வரத்து இருந்ததால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆணைவாரி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் செந்நிறத்தில் அதிகளவு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் வனத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.