

கோவை,
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் கோவை குற்றாலம் அருவியும் ஒன்றாகும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த அருவிக்கு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இதைக் கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டுள்ளது.
இதனால், அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மழையின் தீவிரம் மற்றும் அருவியின் நீர்வரத்தைப் பொறுத்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.