

நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை நேற்று முன் தினம் தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் காரணமாக கேரள மாநிலத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்தது.
இதனிடையே, அம்பாசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன் தினம் முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.மேலும் பார்ப்பதற்கு மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து உள்ளது.