

நெல்லை,
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்து, அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று (புதன்கிழமை) முதல் அருவியில் நீர்வரத்து அபாய கட்டத்தைத் தாண்டியதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அருவியில் குளிக்கத் தடை விதித்தனர். தொடர்ந்து மழை நீடித்து வருவதாலும், அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதாலும் இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாகவும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அருவிப் பகுதிக்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர்வரத்து முழுமையாகச் சீராகி, பாதுகாப்பான சூழல் உருவான பிறகே சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.