பவானி ஆற்றில் 2ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 572 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர்,
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இது தவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து பில்லூர் அணை, மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறு, கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மாயாறு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.
இந்தநிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதே நேரம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் 68 அடியாக குறைந்தது.
இதனிடையே கோவை, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழையால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
100 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி 4 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து வருகிறது. இதனால் கரையோர பகுதி பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
முன்னதாக பவானி ஆற்றின் கரையோரம் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ தடை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் மாயாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 367 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 70.62 அடியாக இருந்தது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16 ஆயிரத்து 572 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 2 அடிக்கு மேல் உயர்ந்து 73.02 அடியாக இருந்தது.
அணையில் இருந்து பவானி ஆற்றில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் என மொத்தம் 405 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






