குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.. 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.. 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Published on

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

கடந்த 23-ந் தேதி மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் புலியருவி, பழைய குற்றாலம் அருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாலையில் பழைய குற்றாலம், புலியருவிக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்றும் தண்ணீர் குறையாததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், 3-வது நாளாக இன்றும் (26-06-2025) சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com