குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தொடர் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
Published on

குழித்துறை, 

தொடர் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் வெள்ளம்

குமரி மாவட்டத்தில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. குமரி மேற்கு மாவட்டத்தில் மார்த்தாண்டம், குழித்துறை, அருமனை, பேச்சிப்பாறை உள்பட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குழித்துறை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை மீது வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. இதனால் தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்பு கம்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரி அறிவுறுத்தல்

இந்த நிலையில் கோதையாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை கடந்துள்ளது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழையினால் அணை நீர்மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் உபரி நீர் அணையில் இருந்து கோதையாற்றில் திறந்து விடப்பட்டு களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காப்பட்டணம் கடலில் சென்று சேரும்.

எனவே, கோதையாறு தாமிரபரணி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்து அதிகரித்தால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் ஆற்றுநீர் புகுந்து சேதங்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. எனவே கரையோர பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com