தமிழ்நாட்டில் வெள்ளம்: தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கும் பாஜக அரசின் வன்மம் கண்டனத்திற்குரியது - ஜவாஹிருல்லா

மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டு வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வெள்ளம்: தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கும் பாஜக அரசின் வன்மம் கண்டனத்திற்குரியது - ஜவாஹிருல்லா
Published on

சென்னை,

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடர் என அறிவிக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்மக்கள் படும் துயரை உணராமல் பாஜகவின் வன்மத்தைப் பிரதிபலிக்கும் இவரைத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்வதற்கு வேதனைப்பட வேண்டியுள்ளது.

கடந்த ஒரு நூற்றாண்டில் காணாத மிக மோசமான பாதிப்பைத் தமிழ்நாடு சந்தித்து இருக்கிறது. வீடுகள் இடிந்தது, வர்த்தக நிறுவனங்கள் சேதமடைந்தது, விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது, கால்நடைகள் இறப்பு என அனைத்து நிலைகளிலும் மிகப்பெரிய அளவில் சேதாரத்தை தமிழக மக்கள் அனுபவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தமிழ்நாடு முதல்வர் பிரதமரிடம் தமிழ்நாட்டிற்குப் பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை நிராகரித்திருப்பது தமிழ்நாடு என்றால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி எப்போதும் ஓரவஞ்சனையாகவே செயல்படும் என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மத்திய அரசின் இந்த இரக்கமற்ற நிலைபாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டு வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com