

திண்டுக்கல்,
விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தேவை அதிகரிப்பு மற்றும் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் வறட்சி காரணமாக பூக்களின் உற்பத்தி குறைந்திருந்தது.
இந்நிலையில் தற்போது பண்டிகை கால விற்பனையாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது. திண்டுக்கலில் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை நேற்று ரூ.500 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் முல்லை ஒரு கிலோ நேற்று ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ ரூ.1,000 வரை விற்பனையாகிறது.
ரோஜா பூக்களின் விலை கிலோ ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக அதிகரித்துள்ளது. செவ்வந்தி ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் சம்பங்கி ஒரு கிலோ ரூ.700, கனகாம்பரம் கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.