

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைந்து, அவற்றின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
தென் தமிழகத்தின் புகழ்பெற்ற பூச்சந்தையான தோவாளைக்கு தினமும் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தோட்டங்களில் இருந்து பூக்களைப் பறிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தைக்குப் பூக்களின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.
வரத்து குறைந்ததன் எதிரொலியாக, இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி பூக்களின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ மல்லிகைப் பூ, இன்று இருமடங்காக உயர்ந்து ரூ.2,000-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ பிச்சிப் பூ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி பூக்களின் விலை திடீரென விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், சுப நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.