பறக்கும் ரெயில்கள், மெட்ரோ ரெயில் நிறுவன வசமாகிறது ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு

மேம்பட்ட வசதிகளுடன், சென்னை பறக்கும் ரெயில்கள், மெட்ரோ ரெயில் நிறுவனம் வசம் வருகிறது.
பறக்கும் ரெயில்கள், மெட்ரோ ரெயில் நிறுவன வசமாகிறது ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு
Published on

சென்னை,

மேம்பட்ட வசதிகளுடன், சென்னை பறக்கும் ரெயில்கள், மெட்ரோ ரெயில் நிறுவனம் வசம் வருகிறது. எனவே ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் விரைவான போக்குவரத்துக்காக தெற்கு ரெயில்வே கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை எம்.ஆர்.டி.எஸ். என்று அழைக்கப்படும் பறக்கும் ரெயில் திட்டம் (சென்னை பெருந்திரள் விரைவு போக்குவரத்து அமைப்பு) கடந்த 1995-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி முதல் இயக்கி வருகிறது.

கடந்த 22 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வரும் இந்த மின்சார ரெயில் சேவையை தினமும் 1 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகிறார் கள்.

இருந்தாலும் 4 லட்சத்து 25 ஆயிரம் பயணிகள் கையாளும் திறன்கொண்ட இந்த ரெயில் சேவையில் 1 லட்சம் பயணிகள் மட்டுமே பயணம் செய்கின்றனர். இதனால் அலுவலக நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் இந்த மார்க்கங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் தெற்கு ரெயில்வேக்கு வருவாய் குறைந்துள்ளது.

எனவே இதனை மாநில அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநில அரசு இயக்கி வரும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் 19.34 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் கொண்ட பறக்கும் ரெயில் திட்டதை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் விரைவில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் இந்த மார்க்கம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக கடற்கரை ரெயில் நிலையத்தின் நிலப்பரப்பு மற்றும் வளாகத்தின் ஒரு பகுதியை எடுத்து, தனியாக ஒரு முனையம் அமைக்கப்பட உள்ளது. அத்துடன் ராஜாஜி சாலையில் வாகன நிறுத்தும் இடமும் தனியாக அமைக்கப்பட உள்ளது. அத்துடன் கடற்கரை ரெயில் நிலையம் முதல் கோட்டை ரெயில் நிலையம் வரை 4-வது ரெயில் பாதையும் அமைக்கப்பட உள்ளது.

இதுதவிர கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கட்டணமும் தற்போது இருப்பதை விட, மெட்ரோ ரெயில் கட்டணம் அளவிற்கு அதிகரிக்கப்படலாம்.

மேம்பட்ட வசதிகளையும் பயணிகள் பெற முடியும். இந்த மார்க்கத்தில் அடுத்த ஆண்டு (2018-ம் ஆண்டு) டிசம்பர் மாதத்தில் ரெயில்களை இயக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com