

திருநெல்வேலி,
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீவஸ்தவா மற்றும் செலவினப் பார்வையாளர் நரேந்திர ஏசரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
நேற்று முன்தினம் பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீவஸ்தவா, அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்குச் சென்றார். அம்பாசமுத்திரத்தில் வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் பலகையைப் பார்வையிட்டார்.
நாங்குநேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு அறை (Strong Room), கட்டுப்பாட்டு அறை மற்றும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, பல்வேறு பகுதிகளில் சோதனை பணிகளை பார்வையாளர் ஆய்வு செய்தார்.
பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினரின் (SST) செயல்பாடுகளை ஆய்வு செய்தார். ராதாபுரம் தொகுதியில் பறக்கும் படை குழுவினர் (FST) வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டார். அதேபோல், தேர்தல் செலவினப் பார்வையாளர் நரேந்திர ஏசரி, அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட சேரன்மகாதேவி சங்கன்திரடு பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்டு வரும் சோதனைகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ் குப்தா, அம்பாசமுத்திரம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாகவும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.