சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலப் பணிகள் - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு


சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலப் பணிகள் - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
x

மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.

சென்னை,

சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை, தமிழக அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சென்னை, சர்தார் பட்டேல் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சர்தார் பட்டேல் சாலையையும் - ராஜீவ் காந்தி சாலையையும் இணைக்கும் வகையில், மத்திய கைலாஷ் சந்திப்பில் அமைக்கப்பட்டு வரும் "L" வடிவ மேம்பால பணிகளை, இன்று (23.7.2025) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தி, 2025 அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிக்கும்படி, அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும், சர்தார் பட்டேல் சாலையில், காந்தி மண்டபம் சாலை முதல் ஜி.எஸ்.டி. சாலை வரை, IIT, அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இருப்பதால், அந்தப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், தற்போதைய நான்கு வழித்தட சாலையை, ஆறு வழித்தடமாக விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும்படி அலுவலர்களுக்கு அமைச்சர் ஆணையிட்டார்.

இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு) கு.கோ.சத்தியபிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் ரா.சந்திரசேகர், சென்னை பெருநகர கண்காணிப்புப் பொறியாளர் ச.ஜவஹர் முத்துராஜ், சென்னை கண்காணிப்புப் பொறியாளர் வி.சரவணசெல்வம், கோட்ட பொறியாளர் பி.சந்திரசேகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story