தொடர் சரிவு எதிரொலி: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்வது நிறுத்தம்

நாமக்கல்லில் தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தொடர் சரிவு எதிரொலி: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்வது நிறுத்தம்
Published on: 

நாமக்கல்,

முட்டை விலையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவையடுத்து நாள் தோறும் விலை நிர்ணயம் செய்வதை நாமக்கல் மண்டல என்.இ.சி.சி. திடீரென நிறுத்தியுள்ளது. வருகிற 28-ந் தேதி வரை தற்போதைய விலையே நீடிக்கும் என அறிவிக்கப்பட் டுள்ளது.

கோழிப்பண்ணைகள்

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும், கேரளம் உள் ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஒரு சில கறிக்கோழி பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நோய் பரவாமல் தடுப்பதற்காக அங்குள்ள கோழிப்பண்ணைகளில் இருந்த கோழிகள் முழுமையாக அழிக்கப்பட்டன.

முட்டை விலை சரிவு

தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் காரணமாக ஓமன் நாட்டில் இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் இருந்து ஓமன் நாட்டிற்கு முட்டை ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலை சீசன் உள்ளிட்ட காரணங்களினால் முட்டை நுகர்வு பரவலாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக முட்டை விலையிலும் தொடர் சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 7-ந் தேதி முட்டை கொள்முதல் விலை ரூ.6.70 ஆக இருந்தது. 11-ந் தேதி 20 காசுகள், 13, 15-ந் தேதிகளில் தலா 25 காசுகள் குறைந்தன. தொடர்ந்து கடந்த 20, 22, 23-ந் தேதிகளில் தலா 20 காசுகள் குறைந்து ரூ.5.40 என நிர்ணயம் செய்யப்பட்டது.

விலை நிர்ணயம் நிறுத்தம்

இதன்படி கடந்த 13 நாட்களில் முட்டை விலை ஒரு ரூபாய் 30 காசுகள் குறைந்துள்ளது. நாள்தோறும் முட்டை விலை ஏற்ற இறக்கத்தை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) நிர்ணயம் செய்கிறது.

முட்டை விலையில் தொடர் இறக்கம் ஏற்பட்டு வந்ததால் நேற்று முன்தினம் நாள்தோறும் விலை நிர்ணயம் செய்வதை என்.இ.சி.சி. நாமக்கல் மண்டலம் நிறுத்தியுள்ளது. வருகிற 28-ந் தேதி வரை தற்போது உள்ள விலையே நீடிக்கும் என தெரிவித்துள்ளது. இது கோழிப்பண்ணையாளர்களை நிம்மதியடைச் செய்துள்ளது.

X