தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள்; குன்றத்தூரில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் சிக்கினான்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் சங்கிலி பறிப்பு சம்பவங்களால் சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.#Tamilnews
தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள்; குன்றத்தூரில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் சிக்கினான்
Published on

சென்னை

சென்னை அரும்பாக்கம் மற்றும் குன்றத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் மர்மநபர்கள் தங்கச்சங்கிலி பறித்துச்சென்றனர். அரும்பாக்கத்தில், சங்கிலியை பறிகொடுக்காமல் போராடிய பெண்ணை மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மநபர்கள் தரதரவென்று இழுத்துச்சென்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த இரண்டாம் கட்டளை, ராகவேந்திரா நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 61). இவரது மனைவி ஜெயஸ்ரீ (57). நேற்று முன்தினம் இருவரும் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஜெயஸ்ரீ அணிந்து இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார். அவரை அசோக்குமார் மற்றும் அங்கு இருந்தவர்கள் விரட்டினர். ஆனால், அந்த மர்மநபர் அங்கு தயாராக இருந்த தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

மர்மநபர் சங்கிலி பறித்ததில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஜெயஸ்ரீ காயம் அடைந்தார். இந்த நகை பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கேமிரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போது நகை பறிப்பில் ஈடுபட்டது பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சை என்பவரது மகன் சிவா (19), அவனது கூட்டாளி அதே பகுதியைச் சேர்ந்த சாலமன் (23) என்பது தெரிந்தது.

நகை பறிப்பில் ஈடுபட்ட காட்சி பத்திரிகை மற்றும் டி.வி.க்களில் வெளியானதையடுத்து இருவரும் புதுச்சேரி, வில்லியனூரில் பதுங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சிவாவை கைது செய்தனர். போலீசார் வருவதை அறிந்த சாலமன் தப்பி ஓடி விட்டான். அவனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நடராஜன் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி மேனகா (45). நேற்று காலை உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மேனகா அரும்பாக்கம் வந்தார். அவர் அங்குள்ள திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்றபோது, 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த மர்மநபர் மேனகாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்தார். அப்போது மேனகா சுதாரித்துக்கொண்டு நகைகளை பிடித்துக்கொண்டார்.

அந்த நபர் தொடர்ந்து இழுத்ததால் மேனகா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இருப்பினும், அந்த நபர் தங்கச்சங்கிலியை கையில் பிடித்துக்கொண்டு அவரை சாலையில் தரதரவென்று இழுத்துக்கொண்டே சென்றார். பின்னர் கையில் கிடைத்த 15 பவுன் தங்கச்சங்கிலியுடன் அவரை அப்படியே போட்டுவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர். இதில் அவர் காயம் அடைந்தார்.

மேனகாவை சாலையில் தரதரவென்று மர்மநபர் இழுத்துச்செல்லும் கொடூர சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதைவைத்து கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com