முதல்-அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பொதுப்பணித்துறையில் 2,406 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு

பொதுப்பணித்துறையில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்கள் 2,406 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னை எழிலகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.
முதல்-அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பொதுப்பணித்துறையில் 2,406 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு
Published on

சென்னை,

தமிழக பொதுப்பணித்துறையில் உள்ள கட்டிடம் மற்றும் நீர்வள ஆதாரப்பிரிவில் 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகள் வரையிலும், 10 ஆண்டுகளுக்கு கீழாகவும் தொகுப்பூதியத்தில் தினக்கூலி பணியாளர்களாக பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக மதுரையில் உள்ள சென்னை ஐகோர்ட்டு கிளை மற்றும் சுப்ரீம் கோர்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் தீர்ப்பின் அடிப்படையில், இதனை பரிசீலித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்படுவார்கள் என்று அறிவித்தார். இதுதொடர்பாக அரசு அரசாணையும் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது, தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மண்டலங்களில் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்கள், இறந்து போன பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் குறித்து உண்மை தன்மையை அறிவதற்காக 15 பொறியாளர்கள் தலைமையில் துணை குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த குழுவினர் கடந்த 15 நாட்களாக மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து 2 ஆயிரத்து 406 பேர் தகுதியானவர்கள் என்று கண்டறிந்து உள்ளனர். இவர்களுடைய கல்வித்தகுதி, பணி விவரங்கள், வருகைப்பதிவேடு மற்றும் ஆதார் அட்டை விவரங்கள் சரிபார்க்கும் பணி சென்னை எழிலகத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து வந்துள்ள தினக்கூலி ஊழியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் பங்கேற்றனர். இதனால் பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

பொதுப்பணித்துறை இணை தலைமை பொறியாளர் (கட்டிடம்) கே.பி.சத்தியமூர்த்தி தலைமையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதில் மதுரை மண்டலத்திற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துவிட்டது. திருச்சி மண்டலத்திற்கு இன்றும், 17-ந்தேதி (நாளை) சென்னையும், 18-ந்தேதி கோவை மண்டலத்திற்கும் நடக்க இருக்கிறது.

தினசரி 250 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு காட்சிகளும் பதிவு செய்யப்படுகிறது. தயாரிக்கப்படும் முழுமையான அறிக்கையை வரும் 21-ந்தேதி முதல்-அமைச்சரிடம் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com