கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் முக்கிய ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை

கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் முக்கிய ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை
Published on

சென்னை,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரியில் மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 35 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கி உள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் கேரள டிஜிபி கூறியுள்ளார்.

திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், தானாக ஒருவர் சரணடைந்துள்ளார். வெடிகுண்டு வைத்தது நான்தான் எனக்கூறி அவர் சரணடைந்துள்ளார். அந்த நபரை போலீசார் முழுவதுமாக நம்பவில்லை என்றாலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ரெயில்கள் மற்றும் கேரளாவில் இருந்து வரும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com