தக்காளியை தொடர்ந்து வெங்காயம் விலையும் உயர்வு

தக்காளியை தொடர்ந்து வெங்காயம் விலையும் உயர்ந்துள்ளது.
தக்காளியை தொடர்ந்து வெங்காயம் விலையும் உயர்வு
Published on

தமிழகத்தில் தக்காளி விலை தங்கத்தின் விலையை போல நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக வெயில் மற்றும் நோய் தாக்குதல் காரணமாக தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து விலை அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் படிப்படியாக குறைய தொடங்கி தற்போது ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்த நிலையில் வெளி மார்க்கெட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு சற்று குறைய தொடங்கி உள்ளது.

தக்காளி ஒருபுறம் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்கு போட்டியாக வெங்காயம் விலையும் அதிகரித்து வருகிறது. பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.35 என்ற விலையிலும், சிறிய வெங்காயம் ரூ.120 என்ற விலையிலும், மற்றொரு சின்ன வெங்காயம் கிலோ ரூ.180 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலம் முடிந்த பின்பும் தொடர்ந்து வெயிலின் தாக்கம் மற்றும் பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதமாக சின்ன வெங்காயத்தின் உற்பத்தி வழக்கத்தை விட குறைந்தது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. சின்ன வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதன் வரத்து தொடர்ந்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக சின்ன வெங்காயம் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.

சின்ன வெங்காய பயிரில் அழுகல், நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கர்நாடக மாநிலத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் அறுவடை பணி தாமதமாகி இருப்பதாலும் வரத்து குறைந்துள்ளதாகவும் அடுத்த மாத மத்தியில்தான் அறுவடை சீராகும் என்பதால் அப்போதுதான் விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தக்காளியை போன்று சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சமையலுக்காக சின்ன வெங்காயத்தை வாங்கும் அளவை மக்கள் குறைத்து வருகிறார்கள். விலை அதிகம் என்பதால் மக்கள் குறைந்தளவிலேயே வெங்காயத்தை வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளியை தொடர்ந்து வெங்காய விலையும் உச்சத்தை எட்டி உள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட ஓட்டல்கள் சமையல் உணவுகளின் விலையை உயர்த்தும் முடிவில் அதன் உரிமையாளர்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com