சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் கூடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

சுழற்சி முறையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேலைகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை, வார்டு-139, கங்கை அம்மன் கோவில் தெரு மற்றும் வார்டு 142, மேற்கு ஜோன்ஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் கூடத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, முதல்-அமைச்சரின் உணவு திட்டத்தில் சுழற்சி முறையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை, மாலை, இரவு என மூன்று வேலைகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவினை தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏதுவாக உணவு வழங்கும் கூடம் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட 16 வார்டுகளிலும் 20 இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், கோடம்பாக்கம் மண்டலம், சைதாப்பேட்டை, வார்டு-139ல் ரூபாய் 19.70 லட்சம் மதிப்பீட்டில் 600 சதுர அடி பரப்பளவில் சைதாப்பேட்டை, கங்கை அம்மன் கோவில் தெருவில் கட்டப்பட்ட உணவு கூடம் மற்றும் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் 500 சதுர அடி பரப்பளவில் வார்டு-142, மேற்கு ஜோன்ஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு கூடம் ஆகிய தூய்மைப் பணியாளர்களுக்கான 2 உணவு கூடங்களை இன்று (24.12.2025) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இந்த உணவு வழங்கும் கூடத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மேசை நாற்காலிகள், மின் விசிறி, மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளின்போது, மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ப.சுப்பிரமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






