

சென்னை,
தரமற்ற குளிர்பானங்களை குடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால், சென்னை முழுவதும் சுமார் 40 ஆயிரம் கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பான மாதிரிகளை சேகரித்து அதன் தரத்தை கண்டறிய உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படாத குளிர்பானங்களை பறிமுதல் செய்யவும், குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் சான்றிதழ்களை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வணிகர்கள், கடைக்காரர்கள் உள்ளிட்டோர் குளிர்பானங்களை நிறுவனங்களிடம் இருந்து வாங்கும்பொழுது அவை தரமானதாக உள்ளதா எனவும், FSSAI குறியீடு உள்ளதா, காலாவதி தேதி அச்சிடப்பட்டுள்ளதா எனவும் சரிபார்த்து வாங்க வேண்டும் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத நிறுவனங்களோ, கடைகளோ இருந்தால் முதல் முறை எச்சரிக்கையும், 2-வது முறை பறிமுதலும், 3-வது முறை தவறு தொடர்ந்தால் சிறை தண்டனை வரை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.