

விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொளஞ்சி, பத்மநாபன், இளங்கோவன் உள்ளிட்ட குழுவினர் நேற்று திண்டிவனம் இந்திரா காந்தி பஸ் நிலையம் அருகே உள்ள பழக்கடைகள், ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் உள்ள குளிர்சாதன பெட்டியில் 25 கிலோ எடையிலான கெட்டுப்போன சிக்கன், பிரைடுரைஸ் 5 கிலோ, நூடுல்ஸ் 3 கிலோ, ஆட்டு தலைக்கறி 2 கிலோ மற்றும் புரோட்டாக்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் கெட்டுப்போன உணவு பொருட்களை பறிமுதல் செய்து நகராட்சி உரம் தயாரிக்கும் இடத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் ஓட்டல் உரிமையாளரிடம் தரமான உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யவேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துச் சென்றனர். இதேபோல் அங்குள்ள ஒரு பழக்கடையில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 16 வாழைத்தார்கள், கெமிக்கல் மூலம் தயாரிக்கப்பட்ட 90 லிட்டர் பழச்சாறு ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.