ஒன்றிய அலுவலகங்கள் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் உள்பட ஒன்றிய அலுவலகங்கள் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அலுவலகங்கள் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

திண்டுக்கல் உள்பட ஒன்றிய அலுவலகங்கள் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார துணை தலைவர் மாலதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விவேகானந்தன், துணை தலைவர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் முருக வள்ளி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும். அந்த திட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பழனி, நிலக்கோட்டை

பழனி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்கத்தின் வட்டார தலைவர் தங்கவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் சரஸ்வதி, வட்ட செயலாளர் பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மங்கலபாண்டியன், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் வேலுசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர். இதில், சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள், ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை தொடர்பான மனுவை அளித்தனர்.

நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட இணை செயலாளர் ஜோதியம்மாள், வட்டார தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஆனஸ்ட்ராஜ், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட பொருளாளர் எழில்வளவன், மாவட்ட நிர்வாகி அருண்பிரசாத், ஒன்றிய நிர்வாகி நாகநந்தினி உள்பட 100-க்கும் மேற்பட்டேர் கலந்துகொண்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அலுவலங்கள் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com