ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்: அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

ரூ.6 ஆயிரம் நிதியுதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்: அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தின்படி, 3-வது தவணை நிதி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு நிர்ணயித்த தகுதிகளின் அடிப்படையில் முதல் இரு தவணை நிதி பெற்ற கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு 3-வது தவணை நிதி மறுக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளை பாதிக்கும் இந்த நடவடிக்கை நியாயமற்றதாகும்.

விவசாயிகளின் விண்ணப்பத்தில் உள்ள பெயரும், ஆதார் அட்டையில் உள்ள பெயரும் பொருந்தவில்லை என்பது தான் நிதியுதவி மறுக்கப்படுவதற்கான முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியாவில், ஆதார் அட்டைகள் எந்த லட்சணத்தில் வழங்கப்படுகின்றன; அவற்றில் எவ்வளவு பிழைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். எனவே, அதைக் காரணம் காட்டி நிதியுதவியை மறுப்பது சரியல்ல. அதுமட்டுமின்றி, விவசாயிகள் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் முதல் இரு தவணை நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், 3-வது தவணையை மட்டும் மறுப்பது அறமாகாது.

ஒருவேளை, விவசாயிகள் தாக்கல் செய்த விண்ணப்பங்களில் ஏதேனும் குறைகள் இருந்தாலும் கூட, அதை ஒரு குறிப்பிட்ட அவகாசத்தில் சரிசெய்யும்படி அறிவுரை வழங்கிவிட்டு, தொடர்ந்து நிதியுதவி வழங்க வேண்டுமே தவிர, அதைக் காரணம் காட்டி நிதியுதவியை நிறுத்தி வைத்திருக்கக் கூடாது. அதுமட்டுமின்றி, விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை திருத்துவதற்கான இணையதளத்தில் பல தொழில்நுட்ப பிரச்சினைகள் இருப்பதால் குறைகளை சரிசெய்ய விவசாயிகளால் முடியவில்லை. இவ்வாறாக தாங்கள் செய்யாத தவறுகளுக்காக நிதியுதவியை இழக்கும் தண்டனையை அனுபவிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளை இப்படி இரு நிலைக்கு அரசு ஆளாக்கக்கூடாது.

எனவே, இத்திட்டத்தின்படி விண்ணப்பித்த அனைத்து விவசாயிக்கும் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் விண்ணப்பங்களில் உள்ள குறைகளை சரிசெய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். இத்திட்டத்தின்படி மானியம்பெற தகுதியுடைய, ஆனால் இதுவரை விண்ணப்பிக்காத விவசாயிகளும் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்து, நிதியுதவி பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com