

சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே கொடுத்த பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். பல போலீஸ் அதிகாரிகள் அ.தி.மு.க. செயலாளர்கள் போல செயல்படுகிறார்கள்.
கரூரில் துணை சூப்பிரண்டு கும்மராஜ், தி.மு.க.வை சேர்ந்த செந்தில்பாலாஜியை கழுத்தில் கைவைத்து தள்ளி இருக்கிறார். இவர், ஏற்கனவே 10 ஆண்டு காலமாக கரூரில் சப்-இன்ஸ்பெக்டராக, இன்ஸ்பெக்டராக, டி.எஸ்.பி.யாக அ.தி.மு.க.வின் தயவோடு பணியாற்றி வருகிறார். அவரை வைத்துக்கொண்டு அங்கு நியாயமான தேர்தல் நடத்த முடியாது, அவரை மாற்றவேண்டும் என்று புகார் கொடுத்துள்ளோம்.
தமிழ்நாட்டில் 18 ஆயிரத்து 750 கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. அந்த கூட்டுறவு சங்கங்களில் பெரும்பாலானவற்றில் அ.தி.மு.க.வினரே தலைவராக இருக்கின்றனர். தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்கு இதுவரை கூட்டுறவு துறையில் இருக்கும் சங்கப் பணியாளர்களை பயன்படுத்தியது கிடையாது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கொண்ட ஜாக்டோ ஜியோவில் இருக்கும் அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். எனவே இந்தத் தேர்தல் பணிக்கும் முழுக்க முழுக்க தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டுறவு சங்க செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் மூலமாக பணப் பட்டுவாடா செய்வதற்கும் அ.தி.மு.க.வினர் திட்டமிட்டிருப்பதால், எக்காரணத்தை கொண்டும் கூட்டுறவு சங்க செயலாளர்களை தேர்தல் பணியில் அமர்த்தக்கூடாது. எனவே கூட்டுறவு சங்கங்கத்தின் ஆணையர் பழனிச்சாமியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளோம்.
தமிழகத்தில் டி.ஜி.பி. உள்பட 10 போலீஸ் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யவேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை வற்புறுத்தியபோது, அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளித்தார்.
முறையான தேர்தல் நடைபெற எங்கள் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 18 சட்டமன்ற தொகுதியிலும் உள்ள போலீஸ் அதிகாரிகளையும் மாற்றவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.