

சென்னை
காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக 20 போலீசாருக்கு வெகுமதி-பாராட்டு சான்றிதழ்களை கமிஷனர் அமல்ராஜ் வழங்கினார்.
சென்னை போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள், போலீசாரை கமிஷனர் அமல்ராஜ் நேரில் வரவழைத்து அவர்களுக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதன்படி எசுபிளனேடு பகுதியில் சுமார் 23 கிலோ ஒப்பியம் போதைப்பொருள் வைத்திருந்த குற்றவாளியை கைது செய்த வடக்கு மண்டல இணை கமிஷனரின் தனிப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசாரையும், நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான டெம்போ மணியை பெங்களூருவில் வைத்து கைது செய்த மேற்கு மண்டல அதிதீவிர கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசாரையும், எழும்பூர் பகுதியில் 22 கிலோ கஞ்சாவுடன் 3 பேரை கைது செய்த, திருவல்லிக்கேணி போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தனிப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ரவிந்திரன் தலைமையிலான போலீசாரையும் கமிஷனர் அமல்ராஜ் நேற்று நேரில் அழைத்து அவர்களுக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.