

சென்னை,
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் மகாராஜபுரம், மாத்தூரைச் சேர்ந்த அமல்ராஜின் மனைவி லூர்து; மாரியப்பனின் மனைவி கருப்பாயி; வெள்ளைச்சாமியின் மகன் தங்கம்; தங்கத்தின் மனைவி சாந்தி மற்றும் பால்ராஜின் மனைவி மாரியம்மாள் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலையைச் சேர்ந்த சிராஜ்தீனின் மகன் அன்சாத் பழம் வெட்ட முயன்றபோது தவறுதலாக காலில்பட்டு ரத்தப்போக்கு அதிகமாகி உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் ஒகளுர் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணியின் மகன் சக்தி மற்றும் மகாராஜனின் மகன் சந்தோஷ் ஆகியோர் குளத்தில் குளிக்கும்போது சேற்றில் சிக்கி உயிரிழந்தார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் பிரவின்குமார்; சிவானந்தத்தின் மகன் பரத்; அருள்ராஜின் மகன் யுகேந்திரன்; பொன்னுதுரையின் மகன் கனிஷ்கர்; சுப்பிரமணியனின் மகன் ராஜாமணி ஆகியோர் கடலில் படகில் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் தும்பல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தனின் மனைவி ரத்தினச்செல்வி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் செ.புதூரைச் சேர்ந்த பாஸ்கரின் மகன் ராஜேஸ் ஆகியோர் பாம்பு கடித்ததில் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷின் மகன் விக்னேஷ், ஜேடர்பாளையம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். கோட்டுவீராம்பாளையம் கிராமத்தில் பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற சலீமின் மனைவி பர்வீன், மகள் ரஹமத்துன்னிஷா; அப்துல் ஜப்பாரின் மகள் பிர்தோஸ் மற்றும் பத்ருன்னிஷா ஆகிய நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்கள் மரணமடைந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 20 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த 20 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.