

சென்னை,
தமிழகத்துக்கு தேவையான மின்சாரம் அனல் மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் நீர், கியாஸ், அணு மின்சார உற்பத்தி நிலையங்கள் மூலம் பெறப்படுகிறது. தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின்நிலையங்களில் 4 ஆயிரத்து 320 மெகாவாட், நீர் மின்சார உற்பத்தி நிலையங்களில் இருந்து 2 ஆயிரத்து 307 மெகாவாட், கியாஸ் மின்சார உற்பத்தி நிலையங்களில் இருந்து 516 மெகாவாட் வீதம் மின்சார உற்பத்தி செய்வதற்கான கொள்திறன் உள்ளது.
இதுதவிர மத்திய தொகுப்பில் இருந்து 5 ஆயிரத்து 800 மெகாவாட்டுக்கு பதிலாக சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் வரை வழங்கப்பட்டு வருகிறது. சீசன் காலங்களில் மட்டும் காற்றாலைகள் மூலம் சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சூரியசக்தி மின்சார தகடுகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
தூத்துக்குடியில் உள்ள அனல் மின்சார நிலையம் 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்கள் உள்ளன. இந்த யூனிட்கள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த யூனிட்டுகளின் மொத்த ஆயுட்காலம் 25 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலத்தை தாண்டி இயங்குவதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனவே இதற்கு ஆண்டுக்கு ஒரு சில மாதங்கள் ஓய்வு கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
இதேபோல் சென்னையை அடுத்த எண்ணூரிலும் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின்நிலையம் உள்ளது. இது 25 ஆண்டுகளுக்கு முன் 5 யூனிட்டுகளில் 450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியுடன் தொடங்கப்பட்டது. இதுதவிர மேட்டூரிலும் அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. காற்றாலை மின்சார உற்பத்தி தொடங்கிய உடன் அனல் மின்சார நிலையங்களின் உற்பத்தி திறன் சற்று குறைக்கப்படுவது வழக்கம். இது குறித்து எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு ஆண்டுதோறும் 3 மாதங்கள் வரை பராமரிப்பு பணிக்காக உற்பத்தி நிறுத்தப்படும். காற்றாலை சீசன் காலமான ஜூன் முதல் ஆகஸ்டு வரை மட்டும் அதிகம் காற்று வீசும் போது சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் வீதம் காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைத்து வருகிறது.
இதனை மின்வாரியம் முழுமையாக வாங்கி கொள்கிறது. இந்த காலகட்டத்தில் அனல்மின்சார நிலையங்களிலும் கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம் இல்லை. நிலக்கரிக்கு ஒருபுறம் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், காற்றாலைகள் சீசன் தொடங்கியவுடன் அனல் மின்சார நிலையங்களில் மின்சார உற்பத்தியை குறைத்து ஆண்டு பராமரிப்பு பணிக்கு உட்படுத்தப்படும்.
அனல் மின்சார உற்பத்தி நிலையங்களில் உடனடியாக மின்சார உற்பத்தியை தொடங்கவும் முடியாது, நிறுத்தவும் முடியாது. படிப்படியாகத்தான் செய்ய முடியும். தற்போது தான் காற்றாலை மின்சார உற்பத்தியில் இறங்கி உள்ளது. உடனடியாக இதை நம்பி அனல் மின்சார உற்பத்தியை குறைத்துவிட முடியாது.
காற்றாலை மின்சார உற்பத்தியின் போக்கை பார்த்து தான் எந்த முடிவும் எடுக்க முடியும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்றாலைகள் மூலம் கூடுதலாக மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றாலை மின்சாரம் கிடைக்கும் அளவுக்கு, சரிசமமாக அனல் மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவும் குறைக்கப்படும். எனவே அடுத்த வாரம் அனல் மின்சார நிலையங்களின் உற்பத்தியை சற்று குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.