

சென்னை,
பெங்களூருவைச் சேர்ந்த 67 வயது பெண் ஒருவர், அமெரிக்காவின் போர்ட்லண்ட் ஓரிகான் பகுதியில் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
திடீரென்று அவர், இருதய நோயால் பாதிக்கப்பட்டார். மிக மோசமான நிலையில் அவர், ஓரிகான் பகுதியில் உள்ள லீகேசி குட் சமரிதான் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அந்த பெண்ணுக்கு நீண்டநாட்கள் சிகிச்சை தேவைப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பெண் இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு எடுத்துள்ளதால் அவரால் அமெரிக்காவில் எடுத்துக்கொள்ளும் சிகிச்சைக்கான செலவை காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பெற முடியாத நிலையும் இருந்து வந்தது.
ரூ.1 கோடி செலவு
இதைத்தொடர்ந்து அவரை அமெரிக்காவில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க அவரது பிள்ளைகள் முடிவு செய்தனர்.
இதற்காக பெங்களூருவில் செயல்பட்டு வரும் 'இண்டர்நேஷனல் கிரிட்டிகல் கேர் ஏர் டிரான்ஸ்பர்' எனப்படும் ஆம்புலன்ஸ் விமான சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டனர்.
அப்போது அந்த நிறுவனம், அமெரிக்காவில் இருந்து அந்த பெண்ணை சென்னைக்கு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அழைத்து செல்ல ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என தெரிவித்துள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவு வசதி
அமெரிக்காவில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கவே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்ற நிலையில் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க அவரது பிள்ளைகள் முடிவு செய்தனர்.
அதன்படி, மிக மோசமான நிலையில் இருந்த அந்த பெண்ணை 24 மணி நேர டாக்டர்கள் கண்காணிப்புடன் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வருவதற்கான திட்டத்தை பெங்களூரு நிறுவனம் மேற்கொண்டது.
அதிநவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவை (ஐ.சி.யூ.) கொண்ட 2 நடுத்தர விமான ஆம்புலன்சை பயன்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்தது.
டாக்டர்கள் கண்காணிப்பு
அதன்படி, ஒரு ஆம்புலன்ஸ் விமானம் போர்ட்லாண்ட் சர்வதேச விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின்பு, ஓரிகான் லீகசி குட் சமரிதான் மருத்துவ மையத்தில் இருந்து அந்த பெண் கடந்த 17-ந் தேதி போர்ட்லாண்ட் சர்வதேச விமான நிலையத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார்.
அங்கு தயாராக இருந்த 'சேலஞ்சர் 605' எனப்படும் ஆம்புலன்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டார். அந்த விமானத்தில் 3 டாக்டர்கள், 2 மருத்துவ பணியாளர்கள் ஆகியோரை கொண்ட மருத்துவக்குழு அந்த பெண்ணின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்தபடி அதே விமானத்தில் பயணித்தது.
இந்த விமானம் 7 மணி நேர பயணத்துக்கு பின்பு ஐஸ்லாந்து ரேய்க்ஜாவிக் விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு எரிபொருள் நிரப்பிய பின்பு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு 6 மணி நேர பயணத்துக்கு பின்பு துருக்கி இஸ்தான்புல் நகரை வந்தடைந்தது.
சென்னை வந்தடைந்தார்
இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து அந்த பெண்ணுடன் வந்த மருத்துவக்குழுவினர் மற்றும் விமானி விடுவிக்கப்பட்டு புதிய மருத்துவக்குழுவினருடன் பெங்களூரு நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டார்.
அங்கிருந்து 4 மணி நேர பயணத்துக்கு பின்பு தியார்பகிர் விமான நிலையத்தை வந்தடைந்த ஆம்புலன்ஸ் விமானம் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.
எமிக்ரேசன் எனப்படும் குடியேற்ற நடைமுறைகள் முடிவடைந்த நிலையில் சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டார்.
பத்திரமாக அழைத்து வரப்பட்டார்
இதுகுறித்து 'இண்டர்நேஷனல் கிரிட்டிகல் கேர் ஏர் டிரான்ஸ்பர்' நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனரான டாக்டர் ஷாலினி நல்வாத் கூறும்போது, 'இந்தியாவிலேயே 2 ஆம்புலன்ஸ் விமானங்களை பயன்படுத்தி டாக்டர்கள் கண்காணிப்புடன் நீண்ட தூரத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண் இவராகத்தான் இருக்கும் என கருதுகிறோம்.
ஒரு கோடி ரூபாய் செலவில் 26 மணி நேர பயணத்தில் இந்த பெண் எங்களது நிறுவனத்தின் மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளார்' என்றார்.