ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதில் பணம்: கவர்னர் கிரண்பெடி உத்தரவை எதிர்த்த நாராயணசாமி வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு தீர்ப்பு

புதுச்சேரியில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதில் ரொக்கப்பணம் வழங்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதில் பணம்: கவர்னர் கிரண்பெடி உத்தரவை எதிர்த்த நாராயணசாமி வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு தீர்ப்பு
Published on

சென்னை,

புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடந்தபோது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்து, நாராயணசாமி தலைமையில் ஆட்சி அமைத்தது. தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்க முடிவு செய்து அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றியது.

இதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. ஆனால், இதற்கு புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி எதிர்ப்பு தெரிவித்தார். இலவச அரிசி வழங்க தடை விதித்து, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரிசிக்கு பதில் ரொக்கப்பணத்தை வங்கி கணக்கு மூலம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இதுதொடர்பாக கிரண்பெடி அனுப்பிய பரிந்துரை கடிதத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும், அரிசிக்கு பதிலாக ரொக்கப்பணம் வழங்கவேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து முதல்-அமைச்சர் நாராயணசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார்.

அப்போது முதல்-அமைச்சர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.சரவணன், அரசின் கொள்கை முடிவில் தலையீடு செய்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் வழங்க கவர்னர் உத்தரவு பிறப்பித்து இருப்பது சட்டவிரோதமானது என்று வாதிட்டார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், கவர்னருக்கு எதிராக வழக்கு தொடர முதல்-அமைச்சருக்கு அடிப்படை உரிமையில்லை. யூனியன் பிரதேச சட்டப்பிரிவுகளின்படி, மத்திய அரசு மற்றும் ஜனாதிபதி பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு யூனியன் பிரதேச அரசு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அரிசி கடத்தல் உள்ளிட்ட மோசடிகளை தடுத்து பயனாளிகள் நேரடியாக பயன் பெறும் வகையிலேயே அரிசிக்கு பதிலாக ரொக்கப்பணம் வழங்கப்படும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதில் எந்த தவறும் இல்லை என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில், புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரிசிக்கு பதிலாக ரொக்கப்பணம் வழங்கப்படும் என ஜனாதிபதியின் அறிவுறுத்தல்படி, மத்திய உள்துறை அமைச்சகமும், கவர்னரும் உத்தரவிட்டுள்ளனர். எனவே, அந்த உத்தரவுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com