திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 சதவீத ஜி.எஸ்.டி.வரியை திரும்ப பெறக்கோரி 600 அரிசி கடைகள் அடைப்பு

அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரி விதித்துள்ளதை திரும்பப்பெறக்கோரி திருப்பத்தூர் மாவட்டத்தில் 600 அரிசி கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 சதவீத ஜி.எஸ்.டி.வரியை திரும்ப பெறக்கோரி 600 அரிசி கடைகள் அடைப்பு
Published on

திருப்பத்தூர்,

அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரி விதித்துள்ளதை திரும்பப்பெறக்கோரி திருப்பத்தூர் மாவட்டத்தில் 600 அரிசி கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.

அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி

மத்திய அரசு அரிசிக்கு விதித்துள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் அரிசி வணிகர்கள் மற்றும் அரிசி ஆலை, அரிசி கடை உரிமையாளர்கள் முழு அடைப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இதனையொட்டிதிருப்பத்தூர் மாவட்ட அரிசி கடை விற்பனையாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி மொத்த வியாபாரிகள் கடையடைப்பு செய்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்ந்து அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் ஏ. தேவராஜன், செயலாளர் ராஜாராணி பி. தாமோதரன், தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், ''மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை அமலுக்கு கொண்டு வந்தபோது தொடக்கத்தில் 50 சதவீத பொருட்களுக்கு முறையே 3, 5, 12, 18, 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்பட்டது.

தற்போது அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலுக்கு வர உள்ளது. நாட்டில் 80 சதவீதம் பேர் ஏழை, நடுத்தர மக்களாவர்.

இது நாள் வரை அரிசிக்கு எந்த அரசும் வரி விதித்தது இல்லை. தற்போது மத்திய அரசு அரிசிக்கு 5 சதவீத வரி விதித்துள்ளது. இந்த வரி நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. மத்தியஅரசு அரிசிக்கு விதித்துள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும்'' என கூறியுள்ளனர்.

ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு

இது தொடர்பாக அரிசி மொத்த விற்பனையாளர்கள் கூறுகையில், ''திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 600 அரிசி விற்பனை கடைகள் கடையடைப்பு செய்து மொத்த அரிசி வணிகர்களும், அரிசி ஆலைகளும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இன்று (அதாவது நேற்று) ஒரு நாள் மட்டும் சுமார் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது இந்த போராட்டத்தால் அரிசி விற்பனை கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அதனைச் சார்ந்த லாரி உரிமையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், அரிசி வணிகர்கள், அரிசி வணிகத்தை சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 சதவீத ஜி.எஸ்.டி.வரியால் 25 கிலோ சிப்பத்திற்கு ரூ.75 முதல் ரூ. 100 வரையும், 100 கிலோ அரிசி மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.400 வரையும் விலை அதிகரிக்கும்.ஏற்கனவே பெட்ரோல், சமையல் கியாஸ் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது அன்றாட உணவு பொருட்களில் அரிசி விலை ஏறினால் அவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே மத்திய அரசு, அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்''என்றனர். ஜி.எஸ்.டி. வரி உயர்வை திரும்ப பெற கோரி அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com