“சுயநலத்திற்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்” - முதல்-அமைச்சர் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதில்

“அரசியல் சுயநலத்திற்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
“சுயநலத்திற்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்” - முதல்-அமைச்சர் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதில்
Published on

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கொரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. பேட்டி கொடுத்தே, அதில் தவறான செய்திகளைப் பேசி அரசியல் செய்தே, கொரோனாவை ஒழித்துவிடலாம் என்று மாநில அரசு நினைக்கிறது. இவை இரண்டுக்கும் மத்தியில்தான் மக்களின் வாழ்க்கை ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.

இன்னும் 2, 3 நாளில் கொரோனாவே இருக்காது என்று முதல்-அமைச்சர் ஆரூடம் சொல்லி இருக்கிறார். இதற்கு இவர் காட்டிய புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது, இவர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றித் திசைதிருப்புகிறாரா, அல்லது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாரா எனத் தெரியவில்லை. இப்போது திடீரென்று கொரோனாவே இல்லை என்று முதல்-அமைச்சர் சொல்வது, பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிட்டதாக எண்ணுவதைப் போன்றது. ஒருவேளை முதல்-அமைச்சர் தனது கையில் மந்திரக்கோல் ஏதாவது வைத்திருப்பாரோ என்று இந்த நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் 3-வது இடம் தமிழகம். விலை மதிப்பில்லாத 15 உயிர்களை இழந்திருக்கிறோம்; 1,264 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்; இதில் 30-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். அனைத்துக்கும் மேலாக சிகிச்சை கொடுத்து வந்த மருத்துவர்களில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். இன்னும் எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற தரவுகளே தெரியவில்லை; திரைமறைவு ரகசியமாக உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் உண்மை நிலையை உணர்ந்து; மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையுடன், மற்றவர் உயிர் மீது நெஞ்சில் கொஞ்சம் ஈரத்துடன் செயல்படாமல், கொரோனா இன்னும் 3 நாளில் ஒழிக்கப்பட்டு, ஜீரோவாக ஆகிவிடும் என்று, ஏதோ, சூ...மந்திரக்காளி போல, முதல்-அமைச்சர் சொல்கிறார் என்றால், இவருக்கு இன்னமும் நோயின் தீவிரம் புரியவில்லையா, அல்லது அருகில் இருப்போர் சரியான தகவல்களை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கவில்லையா, என்றுதான் மருத்துவ நிபுணர்கள் கேட்பார்கள்.

நோயில் நான் அரசியல் செய்வதாக முதல்-அமைச்சர் சொல்லி இருக்கிறார். கொரோனாவில் நான் அரசியல் செய்வதாக இருந்தால், முதல்- அமைச்சருக்கு எந்த ஆலோசனையும் சொல்லாமல் வாய்மூடி இருந்திருக்க வேண்டும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை ஒதுக்காமல் இருந்திருக்க வேண்டும், தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்காமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். இப்படி எல்லாம் நான் இருந்தால்தான் அரசியல் செய்வதாக அர்த்தம்.

மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கி, உதவிகள் செய்து, மத்திய அரசிடம் வாதாடுவதற்குப் பெயர் அரசியல் அல்ல; அக்கறை. தமிழ்நாட்டு மக்கள் மீதான தணியாத அக்கறையில்தான் தி.மு.க. எப்போதும் செயல்படுகிறது.

குறை சொல்வதற்காகவே, தி.மு.க.வை நடத்துவதாகச் சொல்லி இருக்கிறார் முதல்-அமைச்சர். காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல, நாங்கள் சொல்லும் ஆலோசனைகள் கூட அவருக்கு குறைகளாகத் தெரிகின்றன. நாங்கள் இன்னும் குறைகள் சொல்ல ஆரம்பிக்கவில்லை. மீண்டும் முதல்-அமைச்சருக்குச் சொல்வது, அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல. நோயை மறைக்காதீர்கள்; பொய்க்கணக்குக்கான தவறான புள்ளிவிவரங்களை அள்ளிவீசாதீர்கள். பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். உபகரணங்கள், கருவிகளை உடனடியாக வாங்குங்கள். பிழையான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் தராதீர்கள். எப்படியாவது மக்களைக் காப்பாற்றுங்கள்.

நோயை மறைப்பது என்பது உங்களை ஏமாற்றிக்கொள்வது மட்டுமல்ல; நாட்டு மக்களை ஏமாற்றுவதுமாகும். உங்களது அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என்று திரும்பத் திரும்பக்கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய இந்த விளக்கத்தை கண்டு பதறாமல், பார் இதற்கும் பதிலளிக்கிறேன் பேர்வழி என்று, இருக்கும் நேரத்தையும் வீணாக்காமல், கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதல்; பரவலான பரிசோதனை; பாங்கான சிகிச்சை; சிறந்த நிவாரணம்; சீரான மறுவாழ்வு ஆகிய ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை பற்றி ஆழ்ந்து சிந்தித்து, செம்மையாக செயலாற்றி, தமிழ் மக்களை பாதுகாத்திட வேண்டும் என்று மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com